முக்கிய செய்திகள்
  • 1.கோவை தனியார் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு : பள்ளி நிர்வாகிகள் சங்கம் அறிவிப்பு

    கோவை : மாணவர்களிடம் வசூலிக்க நியாயமான கட்டணத்தை அரசு நிர்ணயிப்பது வரை, பள்ளிகள் திறப்பதை காலவரையின்றி ஒத்திவைப்பது என கோவை நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.


    தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் பெற வேண்டிய கட்டணத்தை, அரசு அமைத்த தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய கமிட்டி முடிவு செய்து அறிவித்துள்ளது. பள்ளிகள் வாரியாக, வகுப்பு வாரியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண விபரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த அறிவிப்பு, பள்ளி நிர்வாகிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னை பற்றி விவாதிக்க, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகிகளின் கூட்டம் நேற்று நடந்தது. நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகிகள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி நிர்வாகிகள், புதிய கட்டண விகிதத்துக்கு அதிருப்தி தெரிவித்ததுடன், தீர்வு காண தேவையான ஆலோசனைகளை வழங்கினர். இதன் இறுதியில், கட்டணத்தை உயர்த்துமாறு கமிட்டியிடம் கோரிக்கை வைப்பது என்றும், அதுவரை பள்ளிகள் திறப்பதை ஒத்திவைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.


    கோவை நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகிகள் சங்கத் தலைவர் விசாலாட்சி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தனியார் பள்ளிகளுக்கு 2010-2013ம் ஆண்டு வரை நிர்ணயித்துள்ள கட்டண உத்தரவு அதிருப்தி அளிக்கிறது. 2009-2010ம் ஆண்டுக்கு தனியார் பள்ளிகள் நிர்ணயித்திருந்த முழு ஆண்டுக் கட்டணத்துக்கும், தற்போது கமிட்டி நிர்ணயித்துள்ள முழு ஆண்டுக் கட்டணத்துக்கும் பெருமளவு வேறுபாடு உள்ளது.

    நர்சரி வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை முன்னுக்குப் பின் முரணாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளுக்கு எல்.கே.ஜி., வகுப்புக்கு ஆண்டுக் கட்டணம் 130 ரூபாய் ஆகவும், யு.கே.ஜி.,க்கு 430 ரூபாய் ஆகவும் அமைந்துள்ளது. புதிய கட்டணங்களால் ஆசிரியர், ஊழியர் சம்பளம், நடப்பு செலவினங்கள், பராமரிப்பு, இதர செலவினங்கள், பள்ளிக் கட்டட வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள், வருங்கால நிதி ஒதுக்கீடு, சம்பள உயர்வுக்கான நிதி ஒதுக்கீடு போன்ற செலவினங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.

    பள்ளிகள் அமைந்துள்ள இடங்கள், கட்டமைப்பு வசதிகளின் தன்மைகள் கணக்கில் எடுக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கான கட்டணம் இப்போதே நிர்ணயிக்கப்படுவது நியாயமில்லை. மூன்று ஆண்டுகளில் உயரப் போகும் ஆசிரியர்களின் சம்பளம், செலவினங்களின் உயர்வு ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    இக்கட்டண நிர்ணயத்தை வைத்து ஆசிரியர்களுக்கு, தற்போதைய சம்பளம் வழங்க முடியாது. குறைந்த சம்பளம் ஆசிரியர்களின் தரத்தை குறைக்கும்; கல்வியின் தரம் குறையும். பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலையிழப்பர். பள்ளிகள் கற்றுத்தரும் இதர ஆற்றல்களை வளர்க்கும் கலைகளை தொடர முடியாது.

    மெட்ரிக் பள்ளிகளின் கல்வித் தரத்தால்தான் இன்று தமிழகத்தின் கல்வித் தரம் உயர்ந்த நிலையில் உள்ளது. குறைந்த கட்டணத்தில் அதிருப்தி அடைந்துள்ள பள்ளி நிர்வாகிகள், கட்டண நிர்ணய கமிட்டிக்கு மேல் முறையீடு செய்துள்ளனர்.

    நியாயமான கட்டணம் பற்றிய பரிந்துரையை ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனிடம் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளோம்.  அதன்படி நியாயமான கட்டண அறிவிப்பை வெளியிட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத கட்டணம் உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டால்தான் தொடர்ந்து பள்ளியை நடத்த முடியும். புதிய கட்டண உத்தரவு வெளியாவது வரை, கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகளை திறப்பதை காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். அதுவரை புதிய கட்டணத்தையோ, பழைய கட்டணத்தையோ வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    கிராமப்புற பள்ளிகளில் குறைந்த கட்டணம்தான் பெறுகிறோம். அதிக கட்டணம் கேட்டாலும் பெற்றோரால் தர முடியாது. பள்ளிகளின் வருமானத்தில் பெரும் சதவீதம் ஆசிரியர் சம்பளத்துக்கே செல்கிறது. தனியார் பள்ளி ஆசிரியர் சம்பளத்தையும் அரசே அளித்து ஒழுங்குப்படுத்தினால் அதை வரவேற்போம்.

    பள்ளிகள் பரிந்துரைக்கும் நியாயமான கட்டணத்தை அறிவிக்க தாமதம் ஏற்பட்டால், கடந்த ஆண்டு வசூலித்த தொகையையாவது வசூலிக்க அனுமதிக்க வேண்டும். புதிய கட்டணத்தை நிர்ணயித்து பள்ளியை நடத்த அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, விசாலாட்சி கூறினார்.


    சங்கத்தின் துணைத் தலைவர் கீதா, செயலாளர் சந்திரா, பொருளாளர் சுனிதா உடனிருந்தனர்.


    தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் நலச் சங்கத்தின் மாநில செயலாளர் கிருஷ்ணராஜிடம் கேட்டதற்கு, ''பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் முடிவு எங்களை கட்டுப்படுத்தாது.   எங்கள் பள்ளிகளின் நிலை பற்றி மே 19ல் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்வோம்,'' என்றார்.



    'கல்வி அலுவலர்கள் கட்டுப்படுத்தட்டும்' : தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோரின் குற்றச்சாட்டுகள் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, 'சில பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதால், அனைத்துப் பள்ளிகளையும் தண்டிப்பது நியாயமில்லை. அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் கட்டுப்படுத்தட்டும்' என்றனர், சங்க நிர்வாகிகள்.



  • 2.'கார்பைட்' மாம்பழம் பறிமுதல் : சோதனை நடத்த திடீர் சிக்கல்

    பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியின் சுகாதார நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதால், 'கார்பைட்' வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் பழக்குடோன் களில், மாங்காய்களை 'கார்பைட்' கல் வைத்து பழுக்க வைப்பதாக புகார் எழுந்தது.நகராட்சி கமிஷனர் வரதராஜ் தலைமையில் சுகாதாரத்துறையினர், அதிரடியாக ரெய்டு நடத்தினர். நான்கு கடைகள் மட்டும் ஆய்வு செய்த நிலையில், 'கார்பைட்' மூலம் பழுக்க வைத்த அனைத்து மாம்பழங்களையும் பறிமுதல் செய்யவில்லை.


    இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:  காந்தி மார்க்கெட் பழக் கடைகளில் ரெய்டு நடத்த துவங்கியதும், ஆளுங்கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரருக்கும், பொள்ளாச்சியில் உள்ள ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகி ஒருவருக்கும் தகவல் சென்றது. முதல் கடையில் ரெய்டு நடத்தி அதிகாரிகள் வெளியேறியதும், சுகாதார ஆய்வாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகி போன் செய்தார்.'உலகம் முழுவதும் மாங்காயை பழுக்க வைக்க 'கார்பைட்' கல் வைக்கிறார்கள். பொள்ளாச்சியில் மட்டும் 'கார்பைட்' கல் வைப்பது போன்று ரெய்டு நடத்துகிறீர்கள். பறிமுதல் செய்த மாம்பழங்களை ஒப்படைத்து விட்டு, ரெய்டை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அமைச்சரிடம் பேசி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்' என்று எச்சரித்தார்.அதனால், வேறு வழியின்றி சோதனையை நிறைவு செய்து திரும்பி விட்டோம்.'கார்பைட்' கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடுவதால் வாந்தி, பேதி, ஜீரணக் கோளாறு ஏற்படும். அதனால் அந்த மாம்பழ விற்பனையை தடுக்க ரெய்டு நடத்தப்படுகிறது. இதிலும், ஆளுங்கட்சி தலையீடு ஏற்பட்டால் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.



  • 3.ஊட்டி மலை ரயிலுக்கு டீசல் இன்ஜின் 19ம் தேதி வரை வெள்ளோட்டம்

    மேட்டுப்பாளையம் : 'ஊட்டி மலை ரயில் நீராவி இன்ஜினுக்கு பதிலாக, டீசல் இன்ஜின் பயன்படுத்த ஆய்வு நடக்கிறது. வரும் 19ம் தேதி வரை இந்த இன்ஜின் வெள்ளோட்டம் விடப்படும்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் காலை 7.10 மணிக்கு செல்லும் மலை ரயில், நிலக்கரி மற்றும் பர்னஸ் ஆயிலை எரிபொருளாக பயன்படுத்தி, நீராவி மூலம் இன்ஜின் இயக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 4.5 டன் நிலக்கரி எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது நிலக்கரிக்கு தட்டுப்பாடு அதிகளவில் இருப்பதால், தரமான கரி கிடைப்பதில்லை. அதனால் நீராவி இன்ஜினில் நிலக்கரிக்கு பதிலாக பர்னஸ் ஆயில் பயன்படுத்தி, ரயில் இயக்கப்படுகிறது. இந்த நீராவி இன்ஜினுக்கு பதிலாக டீசல் இன்ஜின் பயன்படுத்தி மலை ரயிலை இயக்க, ரயில்வே நிர்வாகம் தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளது.

    கல்லாறு - குன்னூர் ரயில்பாதை செங்குத்தாக உள்ளதால், 13 கி.மீ., வேகத்தில் ரயில் செல்கிறது. நீராவி இன்ஜின் வாங்கி 100 ஆண்டுகளுக்கு மேலானதால், அதன் உந்துசக்தி குறைந்துள்ளது. புதிதாக மாற்றப்பட்ட இரண்டு டீசல் இன்ஜின்களை வைத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் ஆய்வுப் பணிகளை செய்து வருகிறது. லக்னோவில் உள்ள ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பு தலைமை பொறியாளர் யத்லேஸ் குமார் தலைமையில் தொழில்நுட்பக் குழுவினர் இரண்டு புதிய டீசல் இன்ஜின்களையும் ஆய்வு செய்தனர்.


    ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,'நீராவி இன்ஜினில் இயக்கப்படும் மலை ரயிலை, டீசல் இன்ஜின் மூலம் இயக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு டீசல் இன்ஜின்களுடன் நான்கு பெட்டிகளை இணைத்து முதல் கட்டமாக இந்த ரயில் கல்லாறு மலைப்பாதை துவக்கம் வரை செல்லும். அதன் பின், சிறிது சிறிதாக மலைமீது இயக்கப்படும். வரும் 19ம் தேதி வரை தொடர்ந்து வெள்ளோட்டம் விடப்படும். இப்பயணத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அந்த பாதிப்புகளை சரி செய்த பின், தொடர்ந்து டீசல் இன்ஜின் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.



  • 4.பட்டதாரி ஆசிரியர் நியமன பட்டியலில் குளறுபடி கோவையில் கிளம்பியது புகார்

    கோவை : பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான பட்டியல் தயாரிப்பில் குளறுபடி நடந்துள்ளதாகவும், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பலர், இந்தாண்டும் பட்டியலில் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சி, தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. கோவையில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இதற்கான மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இம்மையத்தின் வெளியே, மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பெயர், இனம், சான்றிதழ் சரிபார்ப்பு எண், பதிவு செய்த ஆண்டு உள்ளிட்ட விபரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. நேற்று கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற ஆசிரியர்கள், சீனியாரிட்டி பட்டியலில் தங்கள் பெயர் பின் வரிசையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான சீனியாரிட்டி பட்டியல் இன்னும் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள ஆசிரியர்களில், 1994, பிப்.,9 வரை பதிவு செய்தவர்கள் கடந்தாண்டு நியமிக்கப்பட்டனர். அதன்படி இந்த ஆண்டு 1994, பிப்.,10 முதல் பதிவு செய்துள்ளவர்களுக்கு நியமனம் நடத்த வேண்டும். ஆனால், 1994, மே 2 முதல் பதிவு செய்துள்ளவர்களுக்கு இந்த ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.


    இதன் மூலம், எங்களில் பலரது பெயர் 100 பேருக்கு பின்னால் போய் விடும். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறோம்; இன்னும் நியமனம் கிடைக்கவில்லை. இடையே பலரின் பெயர் 'சொருகப்படுவதாக' சந்தேகிக்கிறோம். கடந்த ஆண்டு தேர்வான சில ஆசி ரியர்களின் பெயர்கள் இந்தாண்டும் பட்டியலில் சேர்க்கப்பட் டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய 'வெப்சைட்டில்' எண்களை பதிவு செய்பவரின் விபரங்கள் மட்டுமே வருகிது.


    அனைவரின் பதிவு எண் விபரங்களுடன் முறையான பட்டியலை அரசு 'இன்டெர்நெட்'டில் வெளியிட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கைக்கு தேவையான ஆசிரியர்களை மட்டும் பதிவு மூப்பின் அடிப்படையில் அழைக்க வேண்டும். சுமார் 1,000 காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய, பட்டியலில் மீதமுள்ள அனைவரையும் (6,000 பேர்) சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக் கின்றனர். மீதமுள்ளவர்களை வீணாக அலைக்கழிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


  • 5.ரெண்டுமே தண்ணி பிரச்னை தாங்க...! நீருக்கு மக்கள் தவிப்பு

    அத்திக்கடவு பிரதான குடிநீர் குழாய்களில் தொடரும் உடைப்புகளால், சோமனூர் சுற்றுப்பகுதியில் ஏராளமான கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கோவை மாவட்டத்தில், புறநகர் பகுதிகளில் உள்ள ஏராளமான பேரூராட்சிகள், சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 17 ஊராட்சிகளுக்கு, பில்லூர் - அத்திக்கடவு திட்டத்தில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்கான பிரதான குழாய், கோவை - திருச்சி ரோடு வழியாக சூலூர், சாமளாபுரம், கருமத்தம்பட்டி பேரூராட்சி பகுதிக்கு வருகிறது.


    உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு, இந்த பகுதியில் உள்ள அன்னூர் - காமநாயக்கன்பாளையம் மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக ரோட்டோரம் பெரிய அளவில் குழி தோண்டப் பட்டுள்ளது.

    கடந்த ஒன்றரை மாதமாக இந்த பணி காரணம்பேட்டை முதல் கருமத்தம்பட்டி நால்ரோடு வரை நடக்கிறது.  இந்த பணியின் போது ஏராளமான இடங்களில் அத்திக்கடவு திட்ட பிரதான குழாய் சேதமடைந்தது. இதனால், இப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமப் பகுதிகளில் அத்திக்கடவு குடிநீர் 'எட்டிப் பார்த்து' பல வாரங்களாகிறது. ரோட்டில் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் வரிசையில் நின்று, கசியும் தண்ணீரை பாத்திரங்களில் பிடித்துச் செல்லும் அவலம் தொடர்கிறது. பகுதிவாரியாக உள்ள மேல் நிலைத் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி, தெரு மற்றும் வீட்டுக்குழாய் இணைப்புகளுக்கு வழங்கப் படுகிறது.

    தொடர்ந்து பல பகுதிகளில் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்ய முடியாமல், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் திணறுகின்றனர். ஓரிடத்தில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வாரிய ஊழியர்கள் சரி செய்து முடித்து வருவதற்குள் மற்றொரு பகுதியில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால், குடிநீர் வினியோகம் முறையாக செய்ய முடியாமல் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. கருமத்தம்பட்டி பேரூராட்சி பகுதியில் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு பல வாரங்களாகிறது.

    கணியூர் ஊராட்சி பகுதியில் குடிநீர் வந்து 50 நாட்களுக்கும் மேலாகிறது. இது போல இப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேன் மற்றும் லாரிகளில் குடத்துக்கு இரண்டு, மூன்று ரூபாய் கொடுத்து தான் குடிநீர் வாங்கிப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கோடைகாலத்தில், குடிநீர் தேவை அதிகரித்து வரும் நிலையில், குடிநீருக்காக மக்கள் படும் சிரமம் பெரும் திண்டாட்டமாக உள்ளது. குழாய் உடையாமல் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள் ளவும், உடைந்த குழாய்களை உடனடியாக சரி செய்து தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மக்கள் எதிர் பார்க்கின்றனர். குடிநீர் இணைப்பு கேட்டு குவிந்தனர்: கூடலூர் பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு கேட்டு, ஒரே நாளில் 700 பேர் விண்ணப் பித்தனர்.

    கூடலூர் பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பயன் பாட்டில் உள்ள 41 போர்வெல், 19 கை பம்ப், இரண்டு திறந்தவெளி கிணறுகளில் உள்ள தண்ணீர் மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை. குடிநீர் பயன்பாட்டுக்கு மட்டும், அத்திக்கடவு திட்ட நீர் வினியோகிக்கப்படுகிறது. அத்திக்கடவு திட்டத்தில் பெறப்படும் குடிநீரின் அளவை அதிகரித்து, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பை கூடுதலாக வழங்க, பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. புதிய குடிநீர் இணைப்புக்காக மக்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்படுகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில், 700 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


    இது குறித்து, கூடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் கல்யாணசுந்தரம், தலைவர் ரங்கசாமி ஆகியோர் கூறுகையில், 'பெறப் பட்டுள்ள 700 விண்ணப்பங்களில் விதிமுறைகளுக்குட்பட்டு முதல் கட்டமாக 300 பேருக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு படிப்படியாக வழங் கப்படும்,'' என்றனர்.


    - நமது நிருபர் -


  • 6.மக்களுக்கு அலைச்சல் மிச்சம்; உடனடி தீர்வு தொண்டாமுத்தூருக்கு இன்று 'ஜமாபந்தி'

    கோவை : கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில், தொண்டாமுத்தூர் உள்வட்டத்துக்குட்பட்ட பகுதி மக்களிடம் இன்று மனு பெறப்படுகிறது. கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில், கடந்த மே 11ல் இருந்து வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடந்து வருகிறது. இதுவரை, கோவை டவுன், சிங்காநல்லூர் மற்றும் பேரூர் உள்வட்டங்களுக்குட்பட்ட மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகசுந்தரம், இந்த ஜமாபந்திக்கு தலைமை வகித்து மனு பெற்று வருகிறார். பேரூர் உள்வட்டத்துக்குட்பட்ட வேடபட்டி, பேரூர், சுண்டக்காமுத்தூர், குனியமுத்தூர், குறிச்சி பகுதிகளை சேர்ந்த மக்களிடம் நேற்று மனுக்கள் பெறப்பட்டன. பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை கோரி, அதிக மனுக்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில், பல மனுக்களுக்கு உடனுக்குடன் உத்தரவு வழங்க, மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுத்து வருகிறார். நேற்று நடந்த ஜமாபந்தியில், ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் கோரியும், பட்டாவில் பெயர் மாற்றம் கோரியும் சிலர் மனு கொடுத்தனர்.

    பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், உடனடியாக ஆவணங்களை ஆய்வு செய்து, ரேஷன் கார்டிலும், பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார். சாதாரண பெயர் மாற்றத் துக்காக, பல நாட்களாக அலைந்து திரிந்த ஏழை மக்கள் தீர்வு கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்தனர். இதே போன்று, நத்தம் பட்டா, முதியோர் உதவித்தொகை, பார்வையற்றோர் உதவித்தொகை கோரி விண்ணப்பம் கொடுத்த பலருக்கும் உடனடியாக உதவித்தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுத்தார். இன்று நடக்கும் ஜமாபந்தியில், தொண்டாமுத்தூர் உள்வட்டத் துக்கு உட்பட்ட நரசிபுரம், வெள்ளிமலைப்பட்டினம், ஜாகீர்நாயக்கன்பாளையம், தேவராய

    புரம், தொண்டாமுத்தூர், கலிக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, கிழக்கு சித்திரைச்சாவடி மற்றும் மேற்கு சித்திரைச் சாவடி மக்களிடம் மனுக்கள் பெறப்படும். வரும் 18ம் தேதி, தென்னமநல்லூர் உள்வட்டத்தில் ஆலாந்துறை வருவாய் கிராமத்துக்குட்பட்ட இக்கரை போளுவாம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு, மத்வராயபுரம், ஆலாந்துறை, பூலுவபட்டி, தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் மக்களுக்கான வருவாய் தீர்வாயம் நடக்கும். மதுக்கரை வருவாய் கிராமத்துக்குட்பட்ட சீரபாளையம், மதுக்கரை, எட்டிமடை, மாவுத்தம்பதி, பிச்சனூர், திருமலையாம்பாளையம் வடக்கு மற்றும் தெற்கு, வழுக்குப்பாறை கிராம மக்கள், வரும் 19ம் தேதி நேரில் வந்து மனுக்கள் கொடுக்கலாம். மறுநாளான 20ம் தேதியன்று, ஒத்தக்கால் மண்டபத்துக்குட்பட்ட வெள்ளலூர், மலுமச்சம்பட்டி, பாலத்துறை, கருஞ்சாமிக்கவுண்டம்பாளையம், தம்மாக்கவுண்டம்பாளையம், நாச்சிபாளையம், அரிசிபாளையம், மைலேறிபாளையம் மற்றும் ஒத்தக்கால்மண்டபம் பகுதி மக்களுக்கு வருவாய் தீர்வாயம் நடக்கும். இந்த நாட்களில், அந்தந்த பகுதியிலுள்ள கிராம மக்கள், வருவாய்த்துறை சார்ந்த குறைகள் தொடர்பாக நேரில் வந்து விண்ணப்பம் கொடுத்து பயனடையுமாறு, கோவை தெற்கு தாசில்தார் சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.



  • 7.ஆஹா...! கோவைக்கு பெருமை சேர்க்கும் 'ஹைடெக் பஸ் ஸ்டாண்ட்' செம்மொழி மாநாடுக்கு முன்பே திறக்க மாநகராட்சி ஜரூர்

    தமிழகத்தின் முதல் 'ஹைடெக் பஸ் ஸ்டாண்ட்' கோவை - மேட்டுப்பாளை யம் ரோட்டில் விரைவில் திறக்கப்படவுள்ளது. பயணிகளுக்கான வசதிகள், சுற்றுச்சூழல் பராமரிப்பு, பாதுகாப்பு, தொழில் நுட்பம் என பல விதத்திலும் சிறப்பம்சங்களை கொண்ட பஸ் ஸ்டாண்ட்டுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று பெற விண்ணப்பித்துள்ளது, மாநகராட்சி நிர்வாகம். கோவையில் இருந்து ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் நகரங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், கோவை நகருக்குள் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. மொத்தம் 5.58 கோடி ரூபாயில் கட்டுவதற்கான அரசாணை, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது 2005, பிப்.18.,ல் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கான முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பின், புதிய மாநகராட்சி கவுன்சில் பொறுப்பேற்றதும், பஸ் ஸ்டாண்ட் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரசின் ஒப்புதல் பெற்று, கடந்த 2007ல் டெண்டர் விடப்பட்டு 2008 மே 28ல் பணி உத்தரவு வழங்கப்பட்டது. மொத்தம் 6.58 கோடி ரூபாயில் பஸ் ஸ்டாண்ட் கட்ட, மேட்டுப்பாளையம் ரோட்டில் சங்கனூர் பகுதியில் மூன்று ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.


    மத்திய அரசின் நிதி கிடைக்காததால், மாநகராட்சி நிதியில் இதற்காக ஏழு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்டிலிருந்து எதிர் பகுதிக்கு செல்ல, சுரங்க நடைபாதையுடன் சேர்த்தே மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அனுமதி கிடைக்கவில்லை. இப்போது, சுரங்க நடைபாதை இல்லாமலே, பஸ் ஸ்டாண்ட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வெளிப்பகுதியில் நிறைய பிரச்னைகள் இருந்தாலும், தமிழகத்தின் முதல் 'ஹைடெக்' பஸ் ஸ்டாண்ட் என, கூறும் அளவுக்கு ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பஸ் ஸ்டாண்ட் மேற்பகுதியில் 'வாகன பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில், ஒரே நேரத்தில் 25 பஸ்களை நிறுத்த முடியும். அழகான தூண்கள், பளிச்சிடும் டைல்ஸ்கள்என தரை தளம் கவர்கிறது. தரை தளத்திலும் 64 'டூ வீலர்'கள், 20 ஆட்டோக்களை நிறுத்த 'பார்க்கிங்' வசதி உள்ளது.


    முதல் தளத்திலுள்ள 'பார்க்கிங்'கில் 18 கார்கள் மற்றும் 361 'டூ வீலர்'களை நிறுத்த முடியும். டிக்கெட் ரிசர்வேஷன் கவுன்டர், அலுவலக அறைகள்- 2, பொருட்கள் பாதுகாப்பு அறை, ரெஸ்டாரன்ட், மணிக்கூண்டு, பத்திரிகைகள் மற்றும் பால் விற்பனைக்கடைகள் - 6, மின்சார அறை என எல்லாமே தரை தளத்தில் உள்ளன. ஆண், பெண்களுக்கென தனித்தனியாக குளிரூட்டப்பட்ட 'ஏசி' ஹால் இருப்பதே, இந்த பஸ் ஸ்டாண்டின் ஸ்பெஷல். கண்டக்டர், டிரைவர் ஓய்வெடுக்க 'ஏசி' வசதியுடன் அறை உள்ளது. பஸ் ஸ்டாண்டில் 'ஓசோனேட் டடு' முறையில் நான்கு கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருப்பதால், சுகாதாரம் மேம்படும் வாய்ப்புள்ளது. பஸ் ஸ்டாண்டை சுற்றிலும், முதல் தளத்திலும் பசுமை தோட்டம் அமைக்கப்பட்டு, வாகனங்கள் வெளியிடும் கார்பனை உறிஞ்சும் வகையிலான செடிகள் வைக்கப்பட்டுள்ளன. அவை, சூழலை பாதுகாப்பதுடன், பஸ் ஸ்டாண்ட்டின் அழகுக்கு, அழகு சேர்க்கின்றன.


    பஸ் ஸ்டாண்டுக்கு தரப்பட்டுள்ள வண்ணப்பூச்சு அமர்க்களம் என்றால், 'அல்பாபேனலிங்' முறையில் உருவாக்கப்பட்டுள்ள முகப்பு பகுதியும் அசத்துகிறது. உட்புறத்தில் அமைக்கப்படும் செயற்கை நீரூற்று, பஸ் ஸ்டாண்ட் சூழலுக்கு பொலிவூட்டுகிறது. பஸ் ஸ்டாண்ட் பாதுகாப்பை உறுதிப்படுத்த 14 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று கோபுர விளக்குகள், 20 மெட்டல் அலாய் விளக்குகளுடன் இரவிலும் ஜொலிக்கத் தயாராகி வருகிறது புதிய பஸ் ஸ்டாண்ட். இந்த 'ஹைடெக்' பஸ் ஸ்டாண்டுக்கு கலைநயத்துடன் கூடிய நுழைவாயில் அமைக்கப் படுகிறது. தாழ்வான பகுதியில் பஸ் ஸ்டாண்ட் இருப்பதால், மழை நீர் வடிகாலும் மிகக்கவனத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்களுடன் இருப்பதால், இந்த பஸ் ஸ்டாண்ட்டுக்கு 'ஐ.எஸ்.ஓ.,9001' சான்று பெற மாநகராட்சி நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனம், இன்னும் ஓரிரு நாட்களில் பணி முடித்து, முறைப்படி மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவுள்ளது. செம்மொழி மாநாட்டுக்கு முன்பாகவே, புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் வாய்ப்புள்ளது. மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், ''செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக இந்த பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும். ஐ.எஸ்.ஓ., சான்று பெற விண்ணப்பித்துள்ளோம். வரும் ஆறு மாதங்களுக் குள் இரு முறை ஆய்வுக் குழு வந்து பரிசீலிக்கும். அப்போது பராமரிப்பு நன் றாயிருக்கும்பட்சத்தில், தரச்சான்று கிடைக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.


    ஆணையம் ஒப்புதல் : புதிய பஸ் ஸ்டாண்டை ஆய்வு செய்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள், அங்கு பஸ் ஸ்டாண்டை இடம் மாற்ற ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால், பாதசாரிகள் அந்த இடத்தில் ரோட்டைக் கடப்பதில் பெரும் சிரமம் உள்ளது.  இதனால், சுரங்க நடைபாதை அமைக்க வேண்டியது கட்டாயம். இது குறித்து, கமிஷனர் அன்சுல் மிஸ்ராவிடம் கேட்டபோது, ''அங்கு சுரங்க நடைபாதை அமைக்க ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ரோடு அகலப்படுத்தும் பணி முடிந்தபின்னரே, அந்த பணியை துவக்க முடியும்,'' என்றார்.

    -நமது நிருபர் -


பொது
  • 1.செம்மொழி மாநாட்டு பணிகளில் 3,000 மாணவ, மாணவியர் தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற தேர்வு

    கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகளில், தன்னார்வத் தொண்டர்களாக 3000 மாணவ, மாணவியர் பணியாற்ற உள்ளனர்.கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தன்னார்வ தொண்டர்களாக செயல்படவுள்ள கல்லூரி மாணவ, மாணவியருக்கான பயிற்சி முகாம், கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது.


    முகாமுக்கு தலைமை வகித்து, கலெக்டர் உமாநாத் பேசியதாவது: மாநாட்டுப் பணிகளில் தன்னார்வ தொண்டர்களாக செயல்பட 3000 மாணவ, மாணவியர் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இவர்கள் தான், அரசு நிர்வாகத்துக்கும், ஆய்வாளர்களுக்கும் இடையில் பாலமாக செயல்பட வேண்டும். ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்களுக்கான தங்குமிடம், பயண திட்டங்கள், உணவு முறைகள் ஆகியவை அரசு அலுவலர்களால் தொகுக்கப்பட்ட அட்டவணை தயாரிக்கப் படுகிறது. அதில், தன்னார்வத் தொண்டர் களின் பெயர் மற்றும் மொபைல் போன் எண்ணும் தரப்பட்டிருக்கும்.அவர்களது பயண திட்டங்களில் ஏதேனும் மாறுதல்களோ, ஆய்வரங்கங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த சந்தேகங்கள் இருந்தாலோ, அவர்கள் அரசு அலுவலர்களை தொடர்பு கொள்வது சிரமம். அவரவருக்கு தரப்பட்ட அட்டவணையில் உள்ள தன்னார்வ தொண்டர்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.


    உதாரணமாக, வெளிநாடுகளிலிருந்து வரும் பிரதிநிதிகளை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களிலிருந்து அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதி பயண திட்டத்தில் மாறுதல் ஏற்பட்டு சிரமப்பட்டால், தன்னார்வத் தொண்டர்களைத் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம்.ஒவ்வொரு தங்கும் விடுதியிலும் ஓர் அரசு அலுவலர் பணியில் இருப்பார். அவர்களோடு இணைந்து தன்னார்வத் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். மாணவ, மாணவியர் எந்த குழுவில் இணைந்து பணியாற்ற வேண்டுமோ, அந்த குழுவில் பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும். தங்குமிட குழுவுக்கு 120, விருந் தோம்பல் குழுவுக்கு 550 தன்னார்வத் தொண்டர்கள் தேவை என்று கேட்டுள்ளனர். ஒவ்வொரு தன்னார்வத் தொண்டருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடை யாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.


    முகாமில், பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன், பதிவாளர் திருமால்வளவன், தன்னார்வ பணி ஒருங்கிணைப்பாளர் வெங்கடபதி, சிறப்புப்பணி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  • 2.செம்மொழி மாநாடு பாதுகாப்புக்கு 10 ஆயிரம் போலீசார் கமிஷனர் சைலேந்திரபாபு தகவல்

    கோவை : 'உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாதுகாப்புப் பணிக்கு 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவர்' என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறினார்.


    அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கோவையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஏற்பாடுகள் வேகமாக நடக்கின்றன. இம்மாநாட்டில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்பதால், பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். கோவை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்படுகின்றனர்.


    மாநாட்டுக்கு 8,000 வேன்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவிநாசி ரோடு வழியாக வரும் வாகனங்கள், பொதுமக்களை 'கொடீசியா' செல்லும் வழியில் இறக்கி விட்டவுடன், வெளியேறி விட வேண்டும். வேன்கள் நிறுத்த காளப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், அவிநாசி ரோட்டில் வரும் வாகனங்கள் தென்னம்பாளையம் வழியாக காளப்பட்டிக்கு திருப்பி விடப்படும். திருச்சி ரோடு வழியாக வரும் வாகனங்கள் சி.ஐ.டி., பொறியியல் கல்லூõரி வளாகத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், கட்டுரையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தங்குவதற்காக 70 லாட்ஜ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை தனிப்படை பாதுகாப்பில் கொண்டு வரப்படும். இவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுடன், மாநாடு நடக்கும் கொடீசியா அரங்கத்துக்கு காந்திபுரத்தில் இருந்து சத்திரோடு, சரவணம்பட்டி வழியாக அழைத்துச் செல்லப்படுவர்.


    முக்கிய பிரமுகர்களின் வாகனங்களின் பாதுகாப்புப் பணியில் போலீசாருடன், என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர். மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் தவிர, பொதுமக்கள் எந்தவகையிலும் சிரமப்படக்கூடாது என்பதற்காக அவிநாசி ரோட்டில் வழக்கமான பஸ் போக்குவரத்து இருக்கும். மாநாடு நடக்கும் கொடீசியா வளாகத்தில் ஏற்கனவே ஒரு புறநகர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இது மேலும் மூன்றாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தவிர, 24 மணி பாதுகாப்புப் பணியில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மாநாடு நடக்கும் பகுதியை கண்காணித்து, சமூக விரோதிகளை அப்புறப்படுத்தவும், அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்திலும் 12 இடங்களில் சி.சி.,கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. கோவையில் ஏற்கனவே 11 செக்போஸ்ட்கள் செயல்படுகின்றன. செம்மொழி மாநாட்டுக்காக மேலும் ஆறு செக்போஸ்ட் அமைக்கப்படுகின்றன. இவை அதிரடிப்படையினரின் முழு கட்டுப்பாட்டில் செயல்படும். இவ்வாறு, சைலேந்திரபாபு தெரிவித்தார்.


  • 3.கோவை தனியார் பள்ளிகளில் அட்மிஷன் நிறுத்தம் நிர்வாகிகள் காரசார விவாதம்

    கோவை : மாணவர்களிடம் வசூலிக்க நியாயமான கட்டணத்தை அரசு அறிவிப்பது வரை அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க, கோவை தனியார் பள்ளிகள் நிர்வாகிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. புதிய கட்டண நிர்ணயம் தொடர்பாக கோவை நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், கிக்கானி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கோவை நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 400 பள்ளிகளின் தாளாளர்கள் திரளாக பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் பள்ளி தாளாளர்கள் தெரிவித்த கருத்துக்கள்:

    புதிய கட்டண நிர்ணயத்தால் மாநிலத்தின் கல்வித் தரம் பாதிக்கப்படும். அத்துடன் அடுத்த தலைமுறையின் பிரகாசமான எதிர்காலமும் பாதிக்கப்படும். ஐ.ஐ.டி.,- ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்களில் சேரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும். இப்பிரச்னையை சந்திக்க, பகுதிவாரியாக சப்-கமிட்டிகள் ஏற்படுத்தி, சட்ட ரீதியாக திட்டங்களை வகுக்கலாம். இதற்கென சார்ட்டர்டு அக்கவுண்டன்டுகள் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தி ஆலோசனை பெறலாம். பள்ளிகளின் வரவு- செலவு குறித்த துல்லியமான அறிக்கை தயாரித்து, சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் புதிய கட்டணம் பற்றி கமிட்டிக்கு பரிந்துரைப்போம்.


    பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க அரசுக்கு உரிமை உண்டு. நம்மால் அரசை கேள்விக் கேட்க முடியாது. ஆனால், பிற பொருட்கள் போல் அல்லாமல், கல்வி ஒரு சேவை என்பதை அனைவரும் மறந்து விட்டனர். இந்த புதிய கட்டண நிர்ணயம், நமக்கு எதிராக அரசு எய்துள்ள கடைசி அஸ்திரம்.


    உச்ச நீதிமன்றத்துக்கு அவசரப்பட்டு போயிருக்கக் கூடாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, அரசு, தனியார் பள்ளிகளின் செலவு - விபரங்களை ஒப்பிட்டு, சட்ட நிபுணர்களின் உதவியுடன் அணுகியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

    மே 23ல் துணை முதல்வர் ஸ்டாலின் கோவை வருகிறார். அவரை நேரில் சந்தித்து நமது பிரச்னைகளை முறையிடலாம். இப்போதைக்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து இருந்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும். பள்ளிகள் திறக்கும் ஜூன் 2ம் தேதி அனைவரும் மவுன விரதம் மேற்கொள்வோம்.

    தீர்வு கிடைக்கும் வரை பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்தி வைப்போம். பெற்றோரிடம் இது பற்றி விளக்கி ஒத்துழைப்பை கேட்போம். பள்ளிகள் மீண்டும் திறந்தபின் சீருடை, புத்தகங்கள் வழங்கப்படும் என கூறுவோம். அரசுப் பள்ளிகளுக்கு நம் மாணவர்கள் போக மாட்டார்கள். சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட பிற பள்ளிகள் நம் மாணவர்களை அட்மிட் செய்யக் கூடாது என அறிவிப்போம். பள்ளிகள் திறந்ததும் சனி, ஞாயிறுகளில் வகுப்பு நடத்தி பாடங்களை முடிப்போம். தற்போது நடந்து வரும் பிளஸ் 2, 10ம் வகுப்புகளுக்கான சிறப்புப் பயிற்சியை நிறுத்தி வைப்போம். எதிர்க்கட்சிகள், தன்னார்வ நிறுவனங்களின் ஆதரவை கேட்போம். இவ்வாறு, கருத்துக்கள் தெரிவித்தனர்.

    இறுதியில் பேசிய சங்கத்தின் நிர்வாகிகள், 'இப்போது நாம் பள்ளிகளை தொடர்ந்து நடத்த முடியாது. நடத்துவதாக இருந்தால், எந்த கட்டணத்தை வசூலிப்பது? புதிய கட்டணத்தை வசூலித்தால் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை ஏற்றுக் கொண்டதாகி விடும். பழைய கட்டணத்தை பெற்றால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவோம்.

    இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளோம். ஆகவே, மாணவர் சேர்க்கை, அனைத்து கட்டண வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைப்போம். சாதகமான முடிவு தெரியும் வரை பள்ளிகள் திறப்பதை ஒத்திவைப்பதே பாதுகாப்பானது. முடிவை அரசுக்கு விட்டு விடுவோம்' என்றனர்.



  • 4.கோவையில் ரோந்து பணிக்கு 48 புதிய வாகனங்கள்

    கோவை : 'கோவை போலீசாருக்கு புதிதாக வரும் 48 வாகனங்கள் உலகத்தமிழ் மாநாட்டையொட்டி, ரோந்துப் பணிக்கு பயன்படுத்தப்படும்' என, போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.


    கோவையில் ஜூன் 23ல் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு துவங்குகிறது. மாநாட்டையொட்டி, கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில், அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு புது பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், மாநகர் போலீசாருக்கு புதிதாக 48 புது வாகனங்களை அரசு வழங்குகிறது.


    போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறியதாவது: மாநகர போலீசாருக்கு அரசு புதிதாக 48 வாகனங்களை வழங்குகிறது. ஸ்டேஷனுக்கு இரண்டு வாகனங்கள் போக, மீதியுள்ள வாகனங்கள் ரோந்து வாகனங்களாக பயன்படுத்தப்படும். கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள ஸ்டேட் பாங்க் ரோட்டில் தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னையை தீர்க்க, விரைவில் ரயில்வே ஸ்டேஷனுக்கு முன் உள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் புறநகர் போலீஸ் ஸ்டேஷன் துவக்கப்படும். கோவை மாநகரின் முக்கிய ரோடுகளில் ஏற்படும் நெரிசலை குறைக்க, ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இதன்படி விரைவில் மில்ரோடு உள்ளிட்ட மூன்று ரோடுகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும், என்றார்.



  • 5.மாசானியம்மன் கோவில் பக்தர்களுக்கு ரூ.1.80 கோடி செலவில் தங்கும் அறை : ஆனைமலை பேரூராட்சி திட்டம்

    பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 1.80 கோடி ரூபாய் செலவில் தங்கும் அறைகள் மற்றும் வணிக வளாகங்கம் கட்டப்படுகிறது.


    ஆனைமலை பேரூராட்சி தலைவர் அசோக் சண்முகசுந்தரம் கூறியதாவது: மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக, 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், போலீஸ் ஸ்டேஷன் வீதியில் 20 தங்கும் அறைகளும், 36 கடைகளும் கட்டப்படுகின்றன. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்திடம் 30 சதவீத மானியத்துடன், நிதியுதவி பெறப்படும். இதன் மூலம் பக்தர்களுக்கு வசதி ஏற்படுவதுடன், பேரூராட்சிக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்.' இவ்வாறு, பேரூராட்சி தலைவர் தெரிவித்தார். செயல் அலுவலர் செல்வராஜ், துணைத்தலைவர் ஜாபர் அலி உட்பட பலர் உடனிருந்தனர்.

  • 6.பிளஸ் 2 தேர்வு முடிவு ; 'இன்டர் - நெட்' மையங்களில் முன்பதிவு தீவிரம்

    பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், இன்று வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ள மாணவர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை இரண்டாயிரத்து 607 மாணவர்கள், மூவாயிரத்து 99 மாணவிகள் சேர்த்து ஐந்தாயிரத்து 706 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கான முடிவுகளை கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி வெளியிடுகிறார். பொள்ளாச்சி தாலுகா மற்றும் வால்பாறை தாலுகாவை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலை 8.00 மணிக்குள் கோவை வந்து தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் மாணவர்கள் பார்க்கும் வகையில், அறிவிப்பு பலகையில் முடிவுகளை ஒட்ட வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடும் அதே நேரத்தில், இணையதளத்திலும் முடிவுகளை வெளியிட 'நெட்' மையங்கள் தயாராகி வருகின்றன. மாணவர்களும், இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ள முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொள்ளாச்சியிலுள்ள 'நெட்' மையங்களில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நெட் சென்டர்களில், 'தினமலர் கல்விமலர்' வெப்சைட் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ள மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.



  • 7.பொள்ளாச்சி சந்தைக்கு காய்கறி வரத்து குறைவு: விலை அதிகரிப்பு

    பொள்ளாச்சி : வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், பொள்ளாச்சி சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. பொள்ளாச்சி சந்தைக்கு, முக்கோணம், பூலாங்கிணறு, கோமங்கலம், அம்பராம்பாளையம், புரவிபாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து நாட்டுரக காய்கறி வரத்துள்ளது. ஊட்டி, நீலகிரி பகுதியிலிருந்து இங்கிலீஷ் காய்கறி வரத்துள்ளது. இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. கடந்த மாதம் பத்து டன் காய்கறி வரத்து இருந்த நிலையில், தற்போது ஆறு டன் மட்டுமே வரத்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இங்கிலீஷ் ரக காய்கறிகளின் விலை ஒரு மாதத்தில் கிலோவுக்கு 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.நாட்டு தக்காளி விலை ஒரு மாதத்தில், கிலோவுக்கு 12 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி எட்டு ரூபாய்க்கு விற்றது. பீன்ஸ் 20 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்ந்துள்ளது.


    வியாபாரிகள் கூறுகையில்,' கோடை மழை கை கொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்த மழை பொழிவு இல்லாததால், காய்கறி பயிருக்கு தண்ணீர் கிடைக்காமல் வாடியதால், வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வால், மக்களின் வாங்கும் சக்தி குறைந்து; 40 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது'. என்றனர்.



  • 8.பொள்ளாச்சியில் ஜமாபந்தி 194 மனுக்கள் குவிந்தது

    பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகா கோவில்பாளையம் உள்வட்டத்திற்கான ஜமாபந்தியில், 194 மனுக்கள் பெறப்பட்டு, நான்கு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.பொள்ளாச்சி தாசில்தார் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., அன்பழகன் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது. தாசில்தார் வெங்கடேசன், குடிமைப்பொருள் வழங்கல் துறை தனித்தாசில்தார் குப்புசாமி, நேர்முக உதவியாளர் பூபதி ஆகியோர் பங்கேற்றனர்.நேற்று நடந்த ஜமாபந்தியில், பட்டா மாறுதல் கேட்டு 32 மனுக்களும், நத்தம் பட்டா வேண்டி 21 மனுக்களும், வீட்டுமனைப்பட்டா கேட்டு 60 மனுக்களும், முதியோர் உதவித்தொகை வேண்டி 45 மனுக்களும், ரேஷன் கார்டு

    வேண்டி 14 மனுக்களும், நில அளவை செய்யக்கோரி ஆறு மனுக்களும், உட்பிரிவு செய்யக்கோரி ஐந்து மனுக்களும், இதர துறை சார்ந்த 11 மனுக்கள் என மொத்தம் 194 மனுக்கள் பெறப்பட்டது.அதில், பட்டா மாறுதல் உத்தரவு ஒருவருக்கும், நத்தம் பட்டா மூன்று பேருக்கும் வழங்க உடனடியாக உத்தரவிடப்பட்டது. ஜமாபந்தியில் இன்று: கோலார்பட்டி உள்வட்டத்தில் கோமங்கலம், கோமங்கலம்புதூர், மலையாண்டிபட்டிணம், சீலக்காம்பட்டி, நல்லாம்பள்ளி, சோளபாளையம், நாட்டுக்கல்பாளையம், கஞ்சம்பட்டி, கூளநாயக்கன்பட்டி, கோலார்பட்டி, சிஞ்சுவாடி கிராமங்களுக்கு இன்று ஜமாபந்தி நடக்கிறது.



  • 9.உயர் நிலை வகுப்புகளுக்கு புதிய கல்வி முறை வரும் கல்வியாண்டில் அறிமுகம்

    பொள்ளாச்சி : மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் உயர்நிலை வகுப்புகளுக்கு 'படைப்பாற்றல் பிளஸ்' என்ற புதிய கல்வி முறை, வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசு சார்பில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு செயல்முறை கல்வி திட்டத்தின் கீழும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையில் படைப்பாற்றல் கல்வி திட்டத்தின் கீழும் பாடம் கற்பிக்கப்படுகிறது.

    தொடர்ந்து, உயர்நிலை வகுப்புகளுக்கு புகுத்த திட்டமிடப்பட்டு; கடந்தாண்டு தேசிய அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பள்ளிகள் மேம்பாடு செய்யப்படவுள்ளது. இதில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் 'படைபாற்றல் பிளஸ்' என்ற புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இக்கல்வி முறையின் கீழ் கடந்தாண்டு ஆசிரியர்களுக்கு, இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் பாடம் சார்ந்த இப்பயிற்சி வழங்கப்பட்டது.

    இதை அடிப்படையாக கொண்டு, நடப்பாண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படவுள்ளது.  மேலும், உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சார்ந்த கல்வியும், ஆய்வக பயிற்சியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் ஆய்வகம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு; ஆய்வக உபகரணங்கள் வாங்க, பள்ளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் பள்ளி திறந்தவுடன், ஆய்வக உபகரணங்கள் வாங்குவதற்கும், நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் நாளிதழ்கள் வாங்குவதற்கும், இதர செலவுகளுக்காகவும் பள்ளிக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 'படைப்பாற்றல் பிளஸ்' கல்வி முறையின் கீழ் ஜூலை மாதம் முதல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  • 10.மாநில மாநாட்டில் பலம் காட்ட ஊராட்சி உதவியாளர்கள் முடிவு

    அன்னூர் : அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மாநாட்டில், கோவை மாவட்டத்தில் இருந்து ஊராட்சி உதவியாளர்கள் அதிக அளவில் பங்கேற்க முடிவு செய்துள் ளனர்.தமிழ்நாடு ஊராட்சி உதவியாளர்கள் ஒன்றியத்

    தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் சாமிநாதன் அறிக்கை: ஊராட்சி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். பத்து ஆண்டு பணி நிறைவு செய்த ஊராட்சி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க வேண்டும். ஓய்வூதியம், கருணை அடிப்படையில் பணி நியமனம், பணியிடத்தை ஊராட்சி செயலர் என்று பெயர் மாற்றம் செய்தல் ஆகிய கோரிக்கைகள் உள்பட அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் 57வது மாநில மாநாடு வரும் 22ம் தேதி சென்னையில் நடக்கிறது. மாநாட்டில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில், கோவை மாவட்டத்திலிருந்து அனைத்து ஊராட்சி உதவியாளர்களும் பங்கேற்கின்றனர். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாநாட்டு விளக்க பிரசுரங்களை ஊராட்சி உதவியாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வினியோகித்தனர்.

  • 11.ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ தவிடு! அரசுக்கு கொ.மு.க., வலியுறுத்தல்

    சோமனூர் : 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் சிறை நிரப்பும் போராட்டத்தில், 25 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட் டுள்ளது. 'கள்'ளுக்கு அனுமதி அளித்து, மதுபான பட்டியலிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; கரும்பு டன்னுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும், மின் வெட்டை தவிர்க்க வேண்டும், விவசாய மின் இணைப்புகளை தாமதமின்றி வழங்க வேண்டும், ரேஷனில் ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கும் தமிழக அரசு ஒரு ரூபாய்க்கு தவிடு வழங்க வேண்டும். ரோடு மற்றும் பாலம் பணிக்கு கையகப்படுத்தும் இடங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கொ.மு.க., வலியுறுத்தி வருகிறது. வரும் 27ம் தேதி பல்வேறு பகுதிகளில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இப்போராட்டம் குறித்த விளக்க கூட்டம், கோவை வடக்கு மாவட்ட கொ.மு.க., சார்பில் சோமனூரில் நடந்தது. சூலூர், சுல்தான்பேட்டை, அன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி கருமத்தம்பட்டியில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது, ஒன்றியத்துக்கு 5,000 பேர் என மொத்தம் 25 ஆயிரம் பேர் பங்கேற்பது, போராட்டம் குறித்து வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.


  • 12.கூட்டுறவு சங்க தேர்தல் வலியுறுத்தி, நெசவாளர்கள் 19ல் உண்ணாவிரதம்

    அன்னூர் : கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் கோவை மாவட்டத்தில் ஐந்து இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.


    கைத்தறி நெசவாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.,) மாவட்ட தலைவர் ராஜகோபால் அறிக்கை: கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் கடன்களை ரத்து செய்து, தேர்தல் நடத்த வேண்டும். இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். கேரளாவில் உள்ளதுபோல், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, சம்பளத்துடன் கூடிய தேசிய விடுமுறையை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். கைத்தறி உபகரணங்கள் வாங்க மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். பெண் நெசவாளர்களின் ஓய்வூதிய வயதை 50 ஆக மாற்ற வேண்டும். பதிவு செய்த அனைத்து நல வாரிய உறுப்பினர்களுக்கும் நிபந்தனை இல்லாமல் பென்ஷன் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ம் தேதி அன்னூர், சிறுமுகை, செலக்கரிச்சல், சாமிசெட்டிபாளையம் மற்றும் பொள்ளாச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • 13.கட்டுமான தொழிலில் சவால்களை சமாளிக்க இன்ஜினியர்களுக்கு பயிற்சி

    சோமனூர் : கட்டுமானத் துறையில் சவால்களை எதிர்கொள்ள, சிவில் இன்ஜினியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.மத்திய திட்டக் குழுவின் கீழ் செயல்படும் கட்டட வளர்ச்சிக் குழும (சி.ஐ.டி.சி.,) கோவை மைய தலைவர் சீனிவாசன் அறிக்கை:சி.ஐ.டி.சி., கோவை மையத்தின் சார்பில், சிவில் டிப்ளமோ முடித்த மாணவர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றும் சைட் இன்ஜினியர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி முகாம் வரும் 24ம் தேதி துவங்குகிறது. இதன் நோக்கம்,கட்டட துறையில் வேலை வாய்ப்பு மற்றும் முன் அனுபவம் தேவைப்படுவோருக்கு, பணியிடங்களில் சந்திக்கும் சவால் களை சமாளிப்பது குறித்து பயிற்சி அளிப்பதாகும்.கல்லூரியில் படிக்கும் பாடத்துக்கும், நேரடியாக களத்தில் செய்யும் பணிக்கும் வித்தியாசம் உள்ளது. இதனால், வேலையில் அனுபவம் பெற குறைந்தது ஆறு மாத காலமாகிறது. இந்த அனுபவங்களை பாடத்திட்டமாக கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை, ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியில் நடக்கும் இப்பயிற்சியின் முடிவில் முன்னணி நிறுவனங்கள் நேர்காணல் நடத்தி ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.  கட்டுமானத் துறையில் உள்ள நிறுவனங்களும் தங்கள் இன்ஜினியர்களை பங்கேற்க வைக்கலாம். விருப்பமுள்ளோர் 98422 23024, 98656 57000, 98422 23010 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • 14.உத்தமர் காந்தி விருது' ஊராட்சிகளுக்கு அழைப்பு

    கோவை : சிறப்பாக பணியாற்றிய கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி தலைவர்கள், 'உத்தமர் காந்தி விருது' பெற விண்ணப்பிக்கலாம், என்று அரசு அறிவித்துள்ளது. கோவை கலெக்டர் உமாநாத் அறிக்கை:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக, ஊராட்சியின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து சிறப்பான நடவடிக்கைகளையும் அங்கீகரிக்கும் வகையில், உத்தமர் காந்தி ஊராட்சி விருது, கடந்த 2006-07 முதல் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், 15 கிராம ஊராட்சிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஊராட்சியில் மிகச்சிறந்த பணிகள், சிறந்த பூர்வாங்க பணிகள், வருமானத்தை பெருக்குதல், புதிய முயற்சி மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்காக விருது வழங்கப்படுகிறது.

    விருதுக்கு தேர்வு பெறும் ஊராட்சிக்கு நற்சான்றிதழ், கேடயம், ஐந்து லட்சம் ரூபாய்க்கான வெகுமதி பரிசாக அளிக்கப்படும். இத்திட்டத்தில் தேர்வு பெறும் ஊராட்சித் தலைவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். கடந்த 2009-10ம் ஆண்டுக்கான விருது பெற ஆர்வமுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள், 2004 - 05 முதல் 2008-09 வரையுள்ள ஐந்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு முயற்சிகள் குறித்த விபரத்தை வரும் ஜூன் 15க்குள் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். கருத்துரு பெறப்பட்ட பின், தொடர்புடைய ஊராட்சி மன்ற தலைவர்களிடம் தேவையான கூடுதல் தகவல்கள் பெறப்படும். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு, ஒவ்வொரு கருத்துருவினையும் உரிய முறையில் பரிசீலனை செய்து, தகுதியான ஊராட்சிகளை அரசுக்கு பரிந்துரை செய்யும். உத்தமர் காந்தி விருது பெற ஆர்வமுள்ள ஊராட்சி மன்றங்கள், உரிய காலத்துக்குள் கருத்துருக்களை அனுப்பி வைக்கலாம். இவ்வாறு, உமாநாத் தெரிவித்துள்ளார்.


பிரச்னைகள்
  • 1.சிறப்பு பஸ்களுக்கு கூடுதல் கட்டணம்

    பொள்ளாச்சி, : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அமாவாசை தினத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். பக்தர்கள் கூறியதாவது: வழக்கமாக ஆனைமலைக்கு ஐந்து ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமாவாசை தினத்தன்று இயக்கப்படும் பஸ்களில் கூடுதலாக ஒரு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதிருப்தியுடன் வழிபாடு செய்யும் வகையில், பஸ்களில் அத்துமீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பக்தர்கள் தெரிவித்தனர்.


  • 2.பீருக்கு 'குடிமகன்'கள் தவிப்பு

    கோவையிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் 'பீர்'க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், முறைகேடாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக 'குடிமகன்கள்' புலம்புகின்றனர்.


    திருப்பூர் மாவட்டத்திலுள்ள சில பகுதிகளையும் சேர்த்து, கோவை 'டாஸ்மாக்' மாவட்டத்தில் 314 மதுக்கடைகள் சயல்படுகின்றன. தமிழகத்தில், அதிகளவு மது விற்கும் மாவட்டங்களின் பட்டியலில், கோவை 'டாஸ்மாக்' மாவட்டம் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.அதிக விலையுள்ள சரக்குகள் விற்கும் மாவட்டங்களிலும், கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது. ஆனால் சமீபகாலமாக, பெரும்பாலான மதுக்கடைகளில், வாடிக்கையாளர்கள் கேட்கும் சரக்கு ரகங்கள் கிடைப்பதில்லை; குறிப்பாக, பீர் கிடைப்பதில்லை. வழக்கமாக, கோடை காலத்தில் பீர் விற்பனை அதிகரிக்கும் என்பதால், இந்த காலகட்டத்தில் உற்பத்தியும் பல மடங்கு அதிக ரிக்கப்படும். ஆனால், நடப்பாண்டில் பெரும்பாலான மதுக் கடைகளில், பீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கிராம பகுதிகளில் குளிர்சாதனப்பெட்டி வசதி இருக்காது என்பதால், பீர் விற்பனை அதிகம் இருப்பதில்லை. நகர்புறங்களில் குளிர்காலத்திலும் கூட பீர் விற்பனை சீராக நடக்கும். இதற்கேற்ப, நகர்ப்புறங்களில் உள்ள மதுக்கடைகளுக்கே அதிகமான பீர் சப்ளையும் நடக்கும்; ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. நகரங்களில் உள்ள கடைகளில், பீர் கிடைப்பதே அரிதாகிவிட்டதாக, 'குடிமகன்'கள் புலம்புகின்றனர். வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்கப்படுவதாகவும், புதிய நபர்களுக்கு மறுக்கப்படுவதாகவும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.


    மின் தடை அதிகமாக இருப்பதாலும், 'பிரிட்ஜ்' இயக்குவதன் மூலமாக அதிக மின் கட்டண செலவு ஏற்படுவதாலும், பீர் பாட்டில்களை இருப்பு வைத்து விற்க மதுக்கடை ஊழியர்கள் விரும்புவதில்லை. அப்படியே குறைந்த எண்ணிக்கையில் இருப்பு வைத்திருந்தாலும் மின் கட்டணம், பிரிட்ஜ் பராமரிப்பு என பல காரணங்களை கூறி, ஒரு பீருக்கு கூடுதலாக இரண்டு, மூன்று ரூபாயை வாடிக்கையாளரிடம் வசூலித்து விடுகின்றனர். சமீபகாலமாக, கோவை நகரில் ஒரு பீருக்கு ஐந்து முதல் 10 ரூபாய் வரை அதிக விலை வைத்து விற்கப்படுவதாகவும், அதற்கான ரசீதை ஊழியர்கள் தருவதில்லை என்றும், புகார் எழுந்துள்ளது. அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்கவே, பீர் மற்றும் மது பாட்டில்களின் விலையை 'ரவுண்ட் ஆப்' செய்தது தமிழக அரசு. இதனால், மதுக்கடை விற்பனையாளர்களுக்கு கிடைத்து வந்த லாபம் குறைந்தது. மது விற்பனையில் நன்கு காசு பார்த்து பழகிய ஊழியர்கள், இப்போது யாருக்கும் பயப்படாமல் பகிரங்கமாக 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்யத் துவங்கி விட்டனர். 'கிங் பிஷர்' பீர் அதிகபட்ச விலை70 ரூபாய்; ஆனால், விற்பதோ 80 ரூபாய்க்கு. இதேபோல, 60 ரூபாய்க்கு விற்க வேண்டிய பீர்களை 65 ரூபாய் அல்லது 70 ரூபாய்க்கு விற்கின்றனர். பில் கேட்டாலும் தருவதில்லையாம்; பில் கேட்டு தகராறு செய்பவர்களை கடை ஊழியர்கள் தாக்கும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது .மதுக்கடை ஊழியர்கள், இதற்காகவே அடியாட்களை வைத்துள்ளனர்.

    மதுவில் கலப்படம், கூடுதல் விலைக்கு விற்பனை உள்ளிட்ட முறைகேடுகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கவேண்டிய முதுநிலை மண்டல மேலாளர், இதுவரை எந்த ஒரு கடையிலும் கூட அதிரடி ஆய்வு நடத்தியதாக தகவல் இல்லை. ஈரோடு டாஸ்மாக் மாவட்ட மேலாளரே, கூடுதல் பொறுப்பாக கோவை பகுதி டாஸ் மாக்கையும் கவனித்து வருகிறார். அவராலும் அடிக்கடி வந்து இங்கு ஆய்வு செய்ய முடியாததால், மதுக்கடைகள் மற்றும் 'பார்'களில் நினைத்த விலைக்கு சரக்குகள் விற்கப்படுகின்றன.


    வாடிக்கையாளர்களின் புகார் குறித்து, 'டாஸ்மாக்' மாவட்ட மேலாளர் (பொறுப்பு) குணசேகரனிடம் கேட்டபோது, ''பீர் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதனால்தான், பல இடங்களுக்கு சப்ளை செய்ய முடியவில்லை. அதிக விலைக்கு விற்கக்கூடாது என்றும், கண்டிப்பாக பில் தர வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளோம். கடந்த வாரத்தில், மதுவை கூடுதல் விலைக்கு விற்ற இரு ஊழியர்கள் மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம்,'' என்றார்.


    - நமது நிருபர் -



  • 3.அபாய வளைவில் 'உயிர்பலி பாலம்' : அகலப்படுத்த மக்கள் வலியுறுத்தல்

    அன்னூர் : அன்னூர் அடுத்த செல்லப் பம்பாளையத்திலுள்ள குறுகிய பாலத்தில் மாதம் ஒரு விபத்து நடக்கிறது.

    கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் அன்னூரை அடுத்து 12வது கி.மீ., தொலைவில் செல்லப்பம்பாளையம் உள்ளது. இந்த ஊரை அடுத்து முதல் வளைவில் குறுகிய பாலம் உள்ளது. இந்த பாலம் அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து செல்லப்பம் பாளையம் மக்கள் கூறியதாவது: கோவையிலிருந்து சத்திக்கு இந்த வழித்தடத்தில் 72 பஸ்கள் தலா ஆறு முறை சென்று வருகின்றன. கோவையிலிருந்து தாளவாடி, சாம்ராஜ் நகர், கொள்ளேகால், திம்பம் மற்றும் மைசூருக்கு இந்த வழித்தடத்தில்தான் பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்கின்றன. இந்த வழித்தடத்தில் கரும்பு சர்க்கரை ஆலை, பேப்பர் ஆலை உள்ளது. சீசனில் தினமும் 300க்கும் மேற்பட்ட லாரிகள் இந்த வழித்தடத்தில் இயங்குகின்றன. அன்னூரிலிருந்து செல்லப்பம்பாளையத்தை தாண்டும்போது மிக அகலமான ரோடு உள்ளது. வேகமாக செல்லும் வாகனங்கள், அதை அடுத்து வரும் வளைவில் உள்ள குறுகிய பாலத்தில் திருப்ப முடியாமலும், எதிரில் வரும் வாகனத்தை பார்த்து வேகத்தை கட்டுப்படுத்த முடியாமலும் விபத்துக்குள்ளாகின்றன. சமீபத்தில், இந்த வளைவில் நடந்த கார் விபத்தில் அரசு மருத்துவமனை அலுவலரின் மனைவி இறந்தார். மேலும், அரசு பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து 32 பேர் படுகாயமடைந்தனர். டிரெய்லர் லாரி கவிழ்ந்து இருவர் காயமடைந்தனர். அடிக்கடி கரும்பு லாரிகள் விபத்துக்குள்ளாகின்றன. இந்த இடத்தில் வேகத்தடுப்பு வைத்தாலும் அதில் இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. பாலத்தை அகலப்படுத்த வேண்டும். இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.


  • 4.சான்று பெற, 50 கி.மீ., பயணம் போ! மக்களை அலைக்கழிக்கிறது அரசு

    அன்னூர் : நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்று பெற, வடக்கு தாலுகா அலுவலகத்துக்கு அன்னூர் மக்கள் வாரக்கணக்கில் அலைமோத வேண் டிய அவலம் ஏற்பட்டுள்ளது. அன்னூர் ஒன்றியத்தில் 21 கிராம ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி உள்ளது. ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2009 பிப்ரவரியில் அன்னூர் பகுதி, அவிநாசி தாலுகாவிலிருந்து கோவை வடக்கு தாலுகாவிற்கு மாற்றப்பட்டது. இதனால், அன்னூர் மக்கள் மூன்று பஸ்களில் மாறி, மாறி பயணித்து 50 கி.மீ., தூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக, அன்னூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்கப்படும் என தமிழக அரசு கடந்த மாதம் சட்டசபையில் அறிவித்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடப்பதால், புதிய தாலுகா அமைக்கும் பணி 2011 ஏப்ரலில் தான் துவங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. புதிய தாலுகா அமைக்கும் பணி துவங்கவே ஒரு ஆண்டு ஆகும். தாலுகா அமைப்பதற்கு இரண்டு ஆண்டுகள் வரை பிடிக்கும் என்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பல்வேறு பணிகளுக்காக விண்ணப்பத்தை வடக்கு தாலுகா அலுவலகத்தில் கொடுத்தால், குறைந்தது ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு பிறகு வருமாறு டோக்கனில் எழுதி தருகின்றனர். அதன்பின் பல முறை நடையாய் நடந்தபின்பே சான்று பெற முடிகிறது, என மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.


    இது குறித்து குப்பேபாளையம் மக்கள் கூறுகையில்,'பட்டா மாறுதல், மிகவும் அவசியமாக தேவைப் படுகிறது. அவிநாசியில் தாலுகா அலுவலகம் இருந்த போது இரண்டு நாட்களில் பட்டா மாறுதல் செய்து கொடுத்தனர். ஆனால், கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒரு மாதம் ஆனாலும் கிடைப்பதில்லை; பலமுறை அலைய வேண்டி உள்ளது. தினமும் கூலி வேலையை இழந்து பல நாட்கள் அலைய வேண்டியுள்ளது' என்றனர்.


    இளைஞர் காங்., அவிநாசி தொகுதி தலைவர் சத்யப்ரீதா கூறுகையில், ''ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றுகள் வாங்கவும், பல்வேறு நலத்திட்ட உதவிக்கு சான்று வாங்கவும் மக்கள் கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் படாதபாடுபடுகின்றனர். புதிய தாலுகா அமைக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுவரை அன்னூரில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் முகாம் அலுவலகம் நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் மக்களின் அலைச்சல் குறையும்,'' என்றனர்.


    மார்க்.கம்யூ., ஒன்றிய செயலாளர் ராஜ் கூறுகையில், ''பிளஸ் 2 தேர்வு முடிந்து மாணவ, மாணவியர் கல்லூரிகளில் சேர, பல்வேறு சான்றுகள் பெற வேண்டியுள்ளது. கோவை வடக்கு தாலுகாவில் அன்னூர் ஒன்றியம்தான் அதிக பரப்பை கொண்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனே அன்னூரில் முகாம் அலுவலகம் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்,'' என்றார். இது குறித்து கோவை வடக்கு தாசில்தார் சுந்தரராஜன் கூறுகையில், ''பட்டா மாறுதல் பெறுவது மற்றும் சான்று பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் என்னை அணுகி புகார் தெரிவிக்கலாம். விரைவில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


  • 5.சோமனூர் மக்களுக்கு சோதனை : பாலம் பணியால் பஸ் டிரிப் கட்!

    சோமனூர் : சோமனூரில் பாலம் கட்டும் பணி நடப்பதால் பஸ்கள் பாதி வழியில் திரும்பி விடுகின்றன. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். முறையான மாற்றுப் பாதை இல்லாமல் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சோமனூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக, கடந்த மாதம் ரயில்வே கேட் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் பூட்டப் பட்டது. வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு சேடபாளையம் ரயில்வே பாலம் மற்றும் ராமாச்சியம்பாளையம் பாலம் பகுதிகள் மாற்று வழியாக ஏற்பாடு செய் யப்பட்டது.

    சோமனூர் பஸ் ஸ்டாண்ட் ரயில்வே கேட்டைக் கடந்து அமைந்துள்ள நிலையில், வடக்கு பகுதியிலிருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த பஸ்கள் பெரும்பாலும் ரயில்வே கேட் பகுதியில் திரும்பி விடுகின்றன.

    அண்மையில், புதிதாக இயக் கப்பட்ட டிரெய்லர் பஸ்கள் மாற்றுப் பாதையில் சென்று வர முடியாது என்ற நிலையில், சோமனூர் பவர் ஹவுஸ் கார்னரில் திரும்பிச் சென்றுவிடுகின்றன. இந்த பஸ்களில் சோமனூர் பஸ் ஸ்டாண்ட் செல்லும் பயணிகள் கடந்த ஒரு மாதமாக ஏறுவதே இல்லை. அதே போன்று, மற்ற பஸ்களும் ரயில்வே கேட் பகுதியிலேயே பயணிகளை இறக்கி விட்டுத் திரும்புகின்றன. பயணிகள் கேள்வி எழுப்பினால், 'இங்கு இறங்காவிட்டால் திரும்பவும் பவர் ஹவுஸ் ஸ்டாப்பில் நிறுத்தி இறக்கி விடுவோம்' என்று பஸ் ஊழியர்கள் தெரிவிப்பதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.


    இது குறித்து பஸ் ஊழியர்கள் கூறுகையில், 'மாற்றுப் பாதையில் கே.ஆர்., மில் ரோடு, மில் ரோடு, ஊஞ்சப்பாளையம் ரோடு பகுதிகளில் ஏராளமான ரோட்டோர ஆக்கிரமிப்புகள் உள்ளன. 'மேலும், இந்த ரோடுகள் இருவழிப் பாதையாக உள்ளன. கனரக வாகனம் ஒன்று கூட செல்ல முடியாத வழியில் பஸ்கள், பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்ப நீண்ட நேரமாகிறது. 'போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள போது அரை மணி நேரமாகிறது. இதனால், முறையாக நேரத் துக்கு பஸ்களை இயக்க முடியவில்லை' என்றனர்.



சம்பவம்
  • 1.மரங்களை ஏலம் விடுவதில் குழப்பம் : ஒத்திவைத்தது நெடுஞ்சாலைத்துறை

    கோவை : மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள மரங்களை ஏலம் விடுவதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மே 20ம் தேதிக்கு ஏலத்தை ஒத்திவைத்தனர்.


    நாகை - கூடலூர் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், கோயமுத்தூர் ஸ்டாக்எக்சேஞ்ச் கட்டடத்தில் இருந்து, நரசிம்மநாயக்கன் பாளையம் வரை உள்ள ரோட்டின் இரு பகுதியிலும் 816 புளிய மரங்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமாக உள்ளன. மேட்டுப்பாளையம் ரோட்டின் ஒரு பகுதியை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையரகம் நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்கிறது. ரோடு விஸ்தரிக்கும் பணிக்கு இடையூறாக ரோட்டின் இரு பக்கங்களிலும் 816 புளிய மரங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. மரங்களை அடியோடு வெட்டி அகற்றுவதற்கு ஏலம் அறிவிக்கப்பட்டது. அவிநாசி ரோடு மேம்பாலத்தின் வடக்கு பகுதியிலுள்ள நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று காலை ஏலம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏலத்தில் பங்கேற்பதற்கு நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் முன்வைப்புத்தொகை செலுத்த நெடுஞ்சாலைத்துறை அறிவித்தது. அதன் அடிப்படையில் நேற்று ஏலத்தில் பங்கேற்க வந்தவர்கள் அனைவரும் தலா 10 ஆயிரம் ரூபாயை செலுத்தினர். ஏலம் நடப்பதற்கு தயார் நிலையில் அதிகாரிகளும் வந்தனர். ஆனால், அதற்கு முன்பே ஏலம் கோர வந்த சிலர் ஒன்றாக இணைந்து சிண்டிகேட் அமைத்து, மற்றவர்களை ஏலத்தில் பங்கேற்க விடாமல் தடுத்தனர். இதனால் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருதரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, ஏலத்தை மே 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், சிண்டிகேட் அமைப்பவர்கள் ஏலத்தில் பங்கேற்கக்கூடாது என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். ஒவ்வொருவரும் ஏல முன்வைப்புத்தொகையாக செலுத்திய 10 ஆயிரம் ரூபாயை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் திரும்ப ஒப்படைத்து, கையொப்பம் பெற்றுக்கொண்டனர்.


  • 2.'கள்ளுக்காக' நடந்த ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது!

    பொள்ளாச்சி : 'கள்' இறக்கி விற்க உடனடியாக அனுமதி வழங்கக் கோரி, பனை மற்றும் தென்னை தொழிலாளர் சங்கம் சார்பில் பொள்ளாச்சியில் நடந்த ஆர்ப்பாட்டம் கூட்டம் இல்லாததால், 10 நிமிடத்தில் முடிந்தது.

    தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர் சங்கம் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று காலை 11.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 'கள்' இறக்கவும், விற்கவும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், கள்ளுக்கு அனுமதி வழங்குவது குறித்த சிவசுப்பிரமணியன் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி முழுவதும் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். தமிழ்நாடு கள் இயக்கம், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்த பனை, தென்னை தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் காலை 11.30 மணிக்கு திருவள்ளுவர் திடலுக்கு வந்தார். மற்ற நிர்வாகிகள் வருகைக்காக காத்திருந்தார். கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, விவசாயிகள் சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு வராததால் 12.00 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை துவங்கினார். அப்போது, ஐந்து பெண்கள் உள்பட 13 பேர் மட்டுமே இருந்தனர். கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் வீட்டில் இருந்து அழைந்து வந்திருந்த சிறுவர்கள் நான்கு பேரையும் சேர்த்துக்கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்டிருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் 10 நிமிடத்தில் நிறைவடைந்தது. கொளுத்தும் வெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் வெறுப்புடன் திரும்பி சென்றனர்.


  • 3.ரூ.15.6 லட்சம் மோசடி

    கோவை : மகராஷ்டிர மாநிலம், சந்திரபட் பகுதியைச் சேர்ந்தவர்கள் சமீஸ்குமார்; நவீன்குமார். இருவரும், சகோதரர்கள். தங்களிடம் இருந்த 15.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 65 பங்குப்பத்திர டிவிடென்ட் வாரன்ட்களை பணமாக மாற்ற முடிவு செய்தனர். இதற்காக கோவை வந்து அவிநாசிரோடு, லட்சுமி மில் சந்திப்பில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் செலுத்தினர். இதையடுத்து, மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள 'ஏடிஎம்' மூலமாக 15.6 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டனர். இதற்கிடையே, போலி பங்கு பத்திர ஆவணங்களை சமர்ப்பித்து, மோசடி நடந்திருப்பதை அறிந்த வங்கி அதிகாரிகள், கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தனர். மோசடி செய்த இருவரை போலீசார் தேடுகின்றனர்.

  • 4.ஆக்கிரமிப்பை அகற்றுவது எப்போ? ஆவேசமடைந்த மக்கள் மறியல

    பெ.நா.பாளையம் : அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கவுண்டம்பாளையத்தில் நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


    கவுண்டம்பாளையம் நகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்.,நகரில் வீடு இல்லாத 33 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க தேர்வு செய்து, நகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; இதற்கான பணி நடந்து வருகிறது. இந்நிலையில், தனியார் சிலர் எம்.ஜி.ஆர்.,நகரில் நுழைந்து, குடிசைகளை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக, கடந்த மார்ச்சில் பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு குடிசைகளை போலீஸ் உதவியுடன் அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.


    இதுவரை, நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து நேற்று காலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர், எம்.ஜி.ஆர்.,நகர் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டோரிடம், கவுண்டம்பாளையம் வி.ஏ.ஒ., கோவிந்தராஜ் பேச்சு நடத்தினார். இன்னும் பத்து நாட்களில் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அவர் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


    இது குறித்து, கவுண்டம்பாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்,'' அரசு நிலத்தை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக விற்கும் கும்பலிடம் நிலம் சிக்கியுள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் ஆதரவு அளித்துள்ளனர். ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்றாவிட்டால், பொதுமக்களுடன் சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்,'' என்றார்.

 

Tamil news paper

 

 

 

 

English News Papers 

 

 

 

 

Tamil Weekly Magazines  

 

 

 

 

English Monthly Magazines

 

 

 

Tamil TV Channels

 

 

 

 

English TV Channels

 

 

 

 

Make a Free Website with Yola.